பிஹார் : மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் வியூக நிபுணரும் ‘ஜன் சுராஜ்’ கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் தனது முதல் தேர்தல் களத்திலேயே முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி விரைந்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக (1995 முதல்) பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய பாங்கிபூர் தொகுதியில், அவர் இந்த மகத்தான வெற்றியைப் பெறக் காரணமாக அமைந்த ஐந்து முக்கியக் காரணங்கள் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
பிரசாந்த் கிஷோரின் நேரடித் தேர்தல் களம்: கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 238 தொகுதிகளில் தன் கட்சியைப் போட்டியிடச் செய்த பிரசாந்த் கிஷோர், இந்த முறை மற்றவர்களை நிறுத்தாமல் தாமே நேரடியாகக் களம் இறங்கியது மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
பலவீனமான மாற்று வேட்பாளர் : பாஜகவின் தேசியத் தலைவரும், ஐந்து முறை இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வுமாக இருந்த நிதின் நபின் ராஜ்யசபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியாகிய இத்தொகுதியில், பாஜக தரப்பில் களமிறக்கப்பட்ட நீராஜ் குமார் சின்ஹாவுக்கு பெரிய அளவில் அரசியல் தாக்கம் எற்படுத்த இயலவில்லை. இது பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக அமைந்தது என்று கூறலாம்.
மாற்றத்தை விரும்பும் மக்கள்: பாங்கிபூர் தொகுதியை பாஜகவின் "பாரம்பரியக் கோட்டை" என்று வர்ணித்த கட்சியின் அகம்பாவத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை இருந்தது. எனவே, இந்தத் தேர்தலை முதல்வர் சாம்ராட் சௌத்ரியின் ஆட்சி மீதான வாக்கெடுப்பாக (Referendum) மாற்றிய பிரசாந்த் கிஷோர், கட்சிகளைத் தாண்டி மக்கள் தங்களுக்குச் சிறந்த ஒரு மாற்றைத் தேடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தினார்.
பாரம்பரிய சமூகக் கணக்கீடுகள் உடைப்பு: பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருந்த சில உயர் சமூகம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) சமூக வாக்குகளும், ஆர்ஜேடி (RJD) கட்சியின் கணிசமான முஸ்லிம்-யாதவ வாக்குகளும் பாஜகவின் பிடியிலிருந்து விலகி பிரசாந்த் கிஷோரின் பக்கம் திரும்பின. பாரம்பரிய சாதி மற்றும் மத அரசியலைத் தாண்டி கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை அவர் முன்னிறுத்தியது கை கொடுத்தது.
வியூகமும், வீடு வீடான பிரச்சாரமும்: வழக்கமான பொதுக்கூட்டங்களை விட, 'மொஹல்லா' (Mohalla) கூட்டங்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் முறைகளை அவர் தீவிரமாகப் பின்பற்றினார். மேலும், ஆளுங்கட்சியின் உள்ளூர் நிர்வாகத்தில் இருந்த அதிருப்திகளையும், கருத்து வேறுபாடுகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாஜகவின் சமூகக் கூட்டணியை வெற்றிகரமாக உடைத்தார்.