டெல்லி : நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட விவகாரங்கள் தேசிய அளவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துள்ளன.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் டெல்லியில் பேரணியாகச் சென்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைப்பினர் நடத்திய தீவிரப் போராட்டத்தின் காரணமாக காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது 118 காவலர்களும், 60 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், போராட்டத்தின் போது 20 அரசு வாகனங்கள் சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
டெல்லியில் கொதித்தெழுந்துள்ள இந்த மாணவர் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும், நீட் முறைகேடுகளுக்கும் மாணவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறைக்கும் தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினரை வழியிலேயே தடுப்புகளை அமைத்துக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
காவல்துறையின் தடையை மீறி முன்னேற முயன்ற ராகுல் காந்தி மற்றும் ஏராளமான எம்பிக்கள், கட்சித் தொண்டர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து தீவிரத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்துக் கடுமையாகச் சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "டெல்லியில் அமைதியான முறையில் போராடி வரும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்குப் பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.
நமது நாட்டின் கல்வி முறையும், தேர்வு நடத்து முறைகளும் இதுவரை 22 முறைக்கு மேல் சீர்குலைந்து நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது" என்று ஆவேசமாகக் குற்றம்சாட்டினார். நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தத் தொடர் போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.