சென்னை : தமிழ்நாடு முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விஜய் பிரபல நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் விவாகரத்து வழங்குவதோடு நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில், பிரபலங்கள் என்பதால் காணொலி வாயிலாக விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட பலத்த பாதுகாப்புடன், சங்கீதாவிடம் காணொளிக் காட்சி மூலமாக நீதிபதி தீவிர விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின் முடிவில், தன் கணவரும் தமிழக முதல்வருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டுத் தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, விஜய் - சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு முழுமையாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.