சென்னை : ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும், தொடர்ச்சியான ஆணவம் அந்த அழிவை விரைவுபடுத்துும் என்றும் எச்சரித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது " காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்டத் தவறியும், மேகதாது அணையைத் தடுக்கத் திராணியின்றும் செயல்படும் த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இதில் உழவர் பெருமக்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திய நிலையில், கூட்டத்தில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் கையாலாகாத்தனத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். "நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவரவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்கப் பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள்; ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை இந்த ஆட்சியாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
காவிரிப் பிரச்சினையில் அரசின் தோல்வியை மறைத்து, திசைதிருப்பும் நோக்கோடு இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை அவரது வீட்டில் வைத்து அராஜகமான முறையில் காவல்துறையைக் கொண்டு கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, கைது செய்யும் எண்ணமில்லை என்றும் விசாரணைக்குப் பின் விடுவிப்போம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், விசாரணை நடத்துவதாக இருந்தால் சென்னையிலேயே நடத்தியிருக்கலாமே தவிர, எதற்காக ஜாமீனில் வெளிவர முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் அரசு பின்வாங்கியது வெளிப்படையானது.
மேலும், "உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, த.வெ.க. அரசின் பாசிசத் தன்மைக்கு விழுந்த பலத்த அடியாகும்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் தன்னைத் விமர்சிப்பவர்களைக் கைது செய்வதையே முதலமைச்சர் விஜய் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ட்வீட் போட்டாலோ, வீடியோ வெளியிட்டாலோ கைது நடவடிக்கைகள் பாய்வதுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மார்க்கண்டேயன் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களைப் போராட விடாமல் தடுத்தது, மெரினா கடற்கரையை மூடி வைத்தது, விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் மீது பழிபோட்டது மற்றும் திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தது என அனைத்தும் பாசிசத்தின் உச்சமாகும்.
இதன் தொடர்ச்சியாகவே விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் மீது கைதுப் பாய்ச்சல் நடத்தப்பட்டுள்ளது.இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அனைத்துத் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், உண்மை என்னவென்று அறியாமல் சில தலைவர்கள் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது.
அவர் தனது உரையில் யாரையும் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசவில்லை; அவர் பேசாத ஒன்றைச் சிலர் பரப்பிவிட்டனர். உதயநிதி அப்படிப்பட்டவர் அல்ல; ஒருவேளை தவறு ஏற்பட்டிருந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் பண்பாடுடையவர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 'ரீல்ஸ் கிரியேட்டராக' மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.