சென்னை : ஆபரணத் தங்கச் சந்தையில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையானது, இன்று (ஜூலை 24, வெள்ளிக்கிழமை) அதிரடியாகக் குறைந்துள்ளது பொதுமக்களுக்கும் நகை வாங்குவோருக்கும் சற்றே நிம்மதியை அளித்துள்ளது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து தொடங்கிய தங்கம், அதனைத் தொடர்ந்து வந்த செவ்வாய்க்கிழமை ரூ. 560-ம், புதன்கிழமை மிகப்பெரிய அளவில் ரூ. 1,680-ம் மற்றும் வியாழக்கிழமை அன்று மீண்டும் ரூ. 560-ம் எனத் தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டிருந்தது. இந்நிலையில், சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால், தொடர் உயர்வுக்குப் பிறகு இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,160 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,05,840 என்ற விலையிலும், கிராமுக்கு ரூ. 270 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,230 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உயர்வைச் சந்தித்து வந்த வெள்ளி விலை இன்று கிலோவுக்கு அதிரடியாக ரூ. 5,000 வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக, தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 240 என்றும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.40 லட்சம் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.