சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று மூன்றாவது நாளாகத் தொடங்கியது. இக்கூட்டத்தில் நீட் தேர்வு முறையை ரத்து செய்யவும், வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை (FCRA) திரும்பப் பெறவும் வலியுறுத்தி தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துப் பேசினார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "தேர்தலின் போது அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டு, தற்போது தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கை ஒரு 'பெயர் மாற்றப்பட்ட பட்டியல்' போலத்தான் வெளியாகி உள்ளது. நாம் எந்தப் பக்கம் திரும்பினாலும் முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தேர்தலின் போது 'கஜானா காலியாக உள்ளது' என்று கூறியதை இந்த பட்ஜெட் முற்றிலுமாக கேள்விக்குறியாக்கிவிட்டது.

இந்தப் புதிய பட்ஜெட்டில் தவெக அரசின் சொந்தப் புதிய திட்டங்களை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன், ஆனால் தேடியும் கிடைக்கவில்லை"என்று தனது உரையில் விமர்சித்து பேசினார். முந்தைய திமுக அரசின் திட்டங்களையே பெயர் மாற்றி இந்த அரசு தாக்கல் செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியது காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.