டெல்லி : அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (செப்டம்பர் 13, 2026) இந்த விறுவிறுப்பான ஆட்டம் நடைபெறவுள்ளது. ஜப்பானில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒரு மிக முக்கியமான பயிற்சித் தொடராக அமையப்போகிறது. இருப்பினும், தொடக்க வீரர்கள் தேர்வு, வீரர்களின் தற்போதைய ஃபார்ம் மற்றும் காயம் காரணமாக இந்திய அணி நிர்வாகத்திற்குச் சில முக்கிய சவால்கள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் ஓப்பனிங் மற்றும் டாப் ஆர்டரில் நாளை சில முக்கிய மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. வலைப்பயிற்சியின் போது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜஸ்பிரித் பும்ராவின் அதிவேக பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சற்று திணறினார். இதன் காரணமாக, அவருக்கு நாளை ஓய்வளித்துவிட்டு உலகக் கோப்பையில் விளையாடிய அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடியை டாப் ஆர்டரில் களம் இறக்க கௌதம் கம்பீர் திட்டமிட்டுள்ளார்.

வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் நீண்ட நேரம் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து பேட்டிங் பயிற்சி செய்ததோடு, வெள்ளிக்கிழமை பயிற்சியின் போது எல்லாரும் கிளம்பிய பிறகும் கடைசியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இது அவர் நாளை விளையாடுவதை நூறு சதவீதம் உறுதிப்படுத்துகிறது.

டாப் ஆர்டர் தேர்வில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், வெள்ளிக்கிழமை பயிற்சியின் போது இஷான் கிஷனுக்கு எதிர்பாராத விதமாக ஒரு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை காயம் காரணமாக இஷான் கிஷன் நாளைய போட்டியில் இருந்து விலகினால், இந்திய அணி சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவரையும் ஒன்றாகவே விளையாட வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அப்படி நடந்தால், சஞ்சு சாம்சன் மட்டுமே அணியின் ஒரே விக்கெட் கீப்பராகச் செயல்படுவார். அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவோ அல்லது 3-ஆவது இடத்திலோ களம் இறங்கலாம். இதற்கிடையே, வாஷிங்டன் சுந்தரை அதிரடியாக 3-ஆவது இடத்தில் களம் இறக்கி ஆச்சரியம் கொடுக்கவும் கௌதம் கம்பீர் யோசித்து வருகிறார்.

இந்தியாவின் உத்தேச பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன்/வைபவ் சூர்யவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.