ஸ்காட்லாந்து : கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையிலான விளையாட்டுகள் இடம்பெற்றாலும், இந்தப் போட்டி உலக விளையாட்டு ரசிகர்களிடையே பல காரணங்களால் பேசுபொருளாக மாறியது. இந்திய வீரர்களின் அபார செயல்பாடு, புதிய சாதனைகள், எதிர்பாராத திருப்பங்கள், வரலாற்று தருணங்கள் என இந்தத் தொடர் பல மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, இந்தியா 39 பதக்கங்களுடன் தனது பயணத்தை நிறைவு செய்தாலும், அந்த எண்ணிக்கையை விட இந்திய வீரர்கள் படைத்த சாதனைகள்தான் உலகின் கவனத்தை ஈர்த்தன. அதேநேரத்தில், 2030 காமன்வெல்த் போட்டிக்கான மேடையையும் இந்தத் தொடர் அமைத்துக் கொடுத்துள்ளது. எனவே, 2026 காமன்வெல்த் போட்டியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அந்த 7 முக்கிய சம்பவங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

குத்துச்சண்டையில் இந்தியாவின் வரலாற்று ஆதிக்கம்

இந்த முறை இந்தியாவுக்கு அதிக வெற்றியைத் தேடித் தந்த விளையாட்டு குத்துச்சண்டை. இந்திய வீரர், வீராங்கனைகள் இணைந்து 7 தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனையைப் படைத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் இந்திய வீரர்கள் காட்டிய தன்னம்பிக்கையும், தாக்குதல் பாணியும் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல முன்னாள் வீரர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த வெற்றி, உலக குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை மீண்டும் நிரூபித்தது.

மிராபாய் சானுவின் ஹாட்ரிக் சாதனை

இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மிராபாய் சானு மீண்டும் ஒருமுறை தனது தரத்தை நிரூபித்தார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, இந்திய விளையாட்டு வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்தினார். அவரது வெற்றி, அனுபவமும் கடின உழைப்பும் சேர்ந்தால் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

தடகளத்தில் இந்தியாவின் புதிய நம்பிக்கை

இந்த முறை தடகளப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தினர்.குறிப்பாக டெகாத்லான் பிரிவில் இந்தியா வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது. பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் இறுதிச்சுற்றை எட்டியதும், எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

பதக்கங்களுடன் இந்தியா... ஆனால் 4-வது இடம்

முந்தைய காமன்வெல்த் போட்டிகளுடன் ஒப்பிடும்போது இந்த முறை இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் அதற்குக் காரணம் இந்திய வீரர்களின் செயல்பாடு அல்ல. இந்த முறை போட்டியில் இடம்பெற்ற விளையாட்டுகளின் எண்ணிக்கையே குறைவாக இருந்தது. அதனால் பதக்க வாய்ப்புகளும் இயல்பாக குறைந்தன. இருப்பினும் இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்தது.

வெறும் 10 விளையாட்டுகளுடன் நடந்த வித்தியாசமான காமன்வெல்த்

2026 காமன்வெல்த் போட்டியின் மிகப்பெரிய சிறப்பம்சம் இதுதான் என்று கூறலாம். ஏனென்றால், வழக்கமாக பல விளையாட்டுகள் இடம்பெறும் நிலையில், இந்த முறை வெறும் 10 விளையாட்டுகள் மட்டுமே நடத்தப்பட்டன. செலவைக் குறைப்பது, ஏற்கனவே உள்ள மைதானங்களை பயன்படுத்துவது போன்ற நோக்கங்களுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் போட்டியின் வடிவம் மாறியிருந்தாலும், போட்டித் தரத்தில் எந்தக் குறையும் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

2030 காமன்வெல்த் போட்டிக்கான கவுண்ட்டவுன் தொடக்கம்

நிறைவு விழாவின் மிகவும் உணர்ச்சிகரமான தருணம், காமன்வெல்த் கொடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வாகும். இதன் மூலம் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத் நடத்தும் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தியா இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டியை நடத்த இருப்பதால், உலக விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மீண்டும் ஒரு முறை ஆதிக்கம்

பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்து தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. பல விளையாட்டுகளில் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி, காமன்வெல்த் அரங்கில் ஏன் மிகவும் வலுவான நாடாக கருதப்படுகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது.

அதேசமயம் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கடுமையான போட்டியை வழங்கியதால், ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரபரப்பான தருணங்களை அளித்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை, 39 பதக்கங்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. குத்துச்சண்டை, பளுதூக்குதல், தடகளம் உள்ளிட்ட பல பிரிவுகளில் கிடைத்த வெற்றிகள், எதிர்கால ஒலிம்பிக் மற்றும் 2030 அகமதாபாத் காமன்வெல்த் போட்டிக்கான வலுவான அடித்தளமாக பார்க்கப்படுகின்றன.அதனால், 2026 காமன்வெல்த் போட்டி நிறைவடைந்திருந்தாலும், இந்திய விளையாட்டின் புதிய அத்தியாயம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.