புதுடெல்லி, ஆகஸ்ட் 16: கணினியில் டைப் செய்யாமலே தமிழில் பேசினாலே வேலை செய்யும் புதிய ஏஐ (AI) தொழில்நுட்பத்தை எச்பி (HP) மற்றும் சர்வம் ஏஐ (Sarvam AI) நிறுவனங்கள் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்காரணமாக விசைப்பலகை (Keyboard) மற்றும் மவுஸ் இல்லாமலே கணினியை இனி சுலபமாக இயக்க முடியும்.

புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய சர்வம் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் டாக்டர் விவேக் ராகவன் (Dr. Vivek Raghavan), "இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ மொழிகளும் எண்ணற்ற வட்டார வழக்குகளும் உள்ளன. நமது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டே இந்த ஏஐ மாடலை உருவாக்கியுள்ளோம். இந்தியா குறைந்த செலவில் அதிகப் பயன் எதிர்பார்க்கும் நாடு என்பதால், அனைவருக்கும் எளிய மற்றும் மலிவான முறையில் கிடைக்கக்கூடிய திறமையான ஏஐ மாடல்களை உருவாக்கியுள்ளோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த விவேக் ராகவன், மக்கள் தங்களின் சொந்த மொழியிலேயே குரல் வழியில் சேவைகளைப் பயன்படுத்த இத்தொழில்நுட்பம் உதவும் எனக் கூறினார். குறிப்பாக, சாதாரண கீபேட் ஃபோன்களில் (Feature Phones) கூட சர்வம் ஏஐ-ஐ எவ்வாறு குரல் வழியில் பயன்படுத்தலாம் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

எச்பி நிறுவனத்தின் புதிய ஏஐ கணினிகளில் சர்வம் நிறுவனத்தின் தமிழ் ஏஐ மாடல்கள் நேரடியாக நிறுவப்படும். இதனால் இன்டர்நெட் வசதி இல்லாமலே, கணினியின் உள்ளேயே குரல் கட்டளைகளை நொடிப்பொழுதில் கணினி புரிந்துகொண்டு இயங்கும்.

இதன் மூலம் தமிழில் பேசினாலே போதும், கணினியில் ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்களைத் துல்லியமாகத் தயாரிக்க முடியும். உதாரணத்திற்கு, "என் நிலப் பத்திரத்தை எடுத்துக் காட்டு" என்று தமிழில் சொன்னாலே போதும், கணினி தானாகவே அந்தக் கோப்பைக் கண்டுபிடித்து ஓபன் செய்து தரும். அதுமட்டுமின்றி, கணினியின் சவுண்ட், வைஃபை மற்றும் பிரைட்னஸ் அமைப்புகளையும் தமிழில் பேசிக் கட்டுப்படுத்தலாம்.

கிராமப்புற இ-சேவை மையங்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்யத் தெரியாத பொதுமக்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிக பெரிய உதவியாக இருக்கும். அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் இனி தங்கள் கோரிக்கைகளைத் தமிழில் பேசியே கணினியில் பதிவிட முடியும்.