“என்னை கொல்ல முயற்சி” தீராத விளையாட்டுப் பிள்ளை நடிகை பகீர் புகார்!
உணவில் விஷம் கலக்க முயற்சி என என்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக உணருகிறேன் என நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me Too’ இயக்கத்தில் குரல் கொடுத்த பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். ஜூலை 25, 2025 அன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் Me Too விவகாரத்தில் பேசிய பிறகு, என்னைச் சுற்றி மர்மமான பல விஷயங்கள் நடக்கின்றன. என்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக உணர்கிறேன்,” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.
தனுஸ்ரீ தத்தா, தனது காரில் பிரேக் செயலிழப்பு (brake failure) மற்றும் உணவில் விஷம் கலக்க முயற்சி போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டினார். “எனது காரின் பிரேக் திடீரென செயலிழந்தது, இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால், பின்னர் உணவில் விஷம் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கத்தக்க சம்பவங்கள் நடந்தன. இவை தற்செயலாக நடந்தவை இல்லை, இவை என்னை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டவை,” என்று அவர் கூறினார்.
இந்த முயற்சிகளுக்குப் பின்னால், திரைத்துறையில் செல்வாக்கு மிக்க சிலர் இருக்கலாம் என்று அவர் குற்றம்சாட்டினார். 2018-ல் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்தியாவில் ‘Me Too’ இயக்கத்தைத் தூண்டிய முக்கிய நபராக இஅவருடைய பெயரும் வெளியே தெரியப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள், திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்து பரவலான விவாதங்களை உருவாக்கின.
ஆனால், இந்தப் புகார்களுக்குப் பிறகு, தனது தொழில் வாழ்க்கையில் பல தடைகளை எதிர்கொண்டதாகவும், இப்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “நான் உண்மையைப் பேசியதற்காக இப்படி துன்புறுத்தப்படுகிறேன்,” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
வெளிப்படையாக அவர் வந்து புகார் தெரிவித்துள்ள காரணத்தால் இந்த விவகாரம், மும்பை காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. தனுஸ்ரீயின் புகாரின் அடிப்படையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகவும், திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியும் உள்ளனர்.