இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் அருகே சீன நாட்டு ஏவுகணை செயலிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஆகியவற்றை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
அதனை உறுதிபடுத்தும் விதமாக இரு தரப்பில் இருந்தும் அடுத்தடுத்து சிறிய தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூரில் 31 பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்ததாக அந்நாடு குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைக்குள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
அடுத்தடுத்த தாக்குதல்களால் இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவ வீர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தரசில் மற்றும் ஜலந்தர் மாவட்டங்களுக்கு அருகே உள்ள இடத்தில் சீனா தயாரித்த சிறிய ரக ஏவுகணை பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் தான் ஆயுதங்கள் வாங்குகிறது என்பதாலும், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவுவதாலும் பாகிஸ்தான் தான் இந்த ஏவுகணையை இந்தியா மீது வீசி இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கப்டுகின்றன.
இந்த ஏவுகணை தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணை நேற்று இரவே வானில் கண்டறியப்பட்டு அது இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டது என்றும் சில தகவல்கள் உலா வருகின்றன. இந்திய ராணுவம் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.