உரிய காரணமின்றி விசாரணை காவல்.? அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவு.!

உரிய காரணமின்றி விசாரணைகாவலில் எடுத்து விசாரித்ததாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அரசு துறைகளில் ஒன்றாக அமலாக்த்துறை செயல்பட்டு வருகிறது. அதிகாரத்தில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உண்டு. சமீபத்தில் கூட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு அதிகாரங்கள் கொண்ட அமலாக்கத்துறையினர் முறையான காரணம் இன்றி விசாரணை செய்துள்ளார்கள் என கூறி டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறையினர் மீது விசாரணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது குற்றம் சாட்டப்பட்டவர்களை காரணமின்றி 17 நாட்கள் காவலில் வைத்து விசாரித்ததாக அமலாக்கத்துறை துணை இயக்குனர் மற்றும் மற்ற அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த அத்துறை இயக்குனருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், சட்ட ரீதியான உரிய காரணங்கள் இருக்கும் போதுதான் ஒரு நபர் கைது செய்யப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு நபரையும் நியாயமான காரணமின்றி காவலில் எடுத்து வைக்க முடியாது என்றும் டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.