சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!
ராணுவ அதிகாரி சோபியாவை விமர்சித்த விவகாரத்தில் ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என கர்னல் குரேஷி குறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா சர்ச்சைகுரிய வகையில் பேசிருந்தார்.
இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்ததோடு விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். தற்பொழுது, ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியை விமர்சித்த விவகாரத்தில் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்னல் சோபியா குரேஷி குறித்து பயங்கரவாதிகளின் சகோதரி என்று அவதூறு கருத்து தெரிவித்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிறப்பு விசாரணை குழு விரைந்து புலன் விசாரணை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து விடுபடவே மன்னிப்பு கேட்பதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும், வழக்கை அமைச்சர் சந்தித்தே ஆக வேண்டும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். மிக மோசமாக பேசிவிட்டு மன்னிப்பு கோருவதா? என கேட்ட நீதிமன்றம் மன்னிப்பு கோரக்கூட அருகதை இல்லா பேச்சு அது என கடுமையாக சாடியுள்ளது.
மேலும், இந்த வழக்கிலிருந்து விடுபடுவதற்காக கேட்கப்படும் மன்னிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். நாளை காலை 10 மணிக்குள் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கவும், மே 28 ஆம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.