#Breaking:ஹெலிகாப்டர் விபத்து;அடையாளம் காணப்பட்ட 2 பேரின் உடல்கள்

Default Image

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,உடல்கள் எரிந்த நிலையில் இருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் ,அவரது மனைவி,மற்றும் முப்படைத் தளபதியின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து,உயிரிழந்த 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டன.இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மலர் தூவியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று காலை 11 மணி முதல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவிற்கு பொதுமக்களும், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் திமுக எம்.பிக்கள் ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து,பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது சாலை எங்கிலும் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடியுடன் முழக்கமிட்டு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் இரு மகள்கள், குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர். அங்கு பிரிட்டன், பிரான்ஸ், தூதர்கள் இலங்கை, பூடான் நேபாளம், வங்காளதேசம் ராணுவ தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இராணுவ வீரர்கள் இசை முழங்க இதய அஞ்சலி செலுத்தப்பட்ட பின், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதியாக பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடல்கள் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டு 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 ராணுவ வீரர்களின் மரியாதையுடன் இருவரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையில்,பிரிகேடியர் உடலும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அதே சமயம்,விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில்,ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,மேலும்,இருவரின் உடல்களும் இன்று காலை அவர்களது குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இருவரது உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது.அதன்படி,இவர்கள் இருவரின் இறுதிச்சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெறவுள்ளது.அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து,ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மீதமுள்ளவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்