கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!
திமுகவுடனான கூட்டணியில் அதிருப்தி என எந்த மதிமுக நிர்வாகியும் தெரிவிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் “திமுக அரசுக்கு எதிராக எந்தவொரு கட்டத்திலும், எந்தப் பிரச்சனையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட விமர்சனம் செய்ததில்லை. இனியும் செய்ய மாட்டோம்.
கலைஞர் (மு.கருணாநிதி) இருந்தவரை அவருக்கு பக்கபலமாக இருந்தேன். அவருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி, முதல்வர் ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன். இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்”என தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” திமுக நிச்சயமாக தேர்தலில் பெற்று வெற்றி பெறும். ஆனால், கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். ஏனென்பரால், நான் கூட்டணி அரசு வரவேண்டும் என்று விரும்புவதில்லை. அதே சமயம், கண்டிப்பாக தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சி என்பதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.
திமுகவுடன் கூட்டணிகள் வைப்பத்தில் அதிருப்தி என எந்த மதிமுக நிர்வாகியும் தெரிவிக்கவில்லை. அப்படி வெளியான செய்திகள் வதந்தியாக பரவும் தகவல் தான்” எனவும் பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து மேலும் அவர் பேசுகையில் ” முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசைத் தொடர்ந்து நடத்துவார். அந்த மாபெரும் வெற்றிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்” எனவும் பேசினார்.
அதன்பிறகு, பாஜக குறித்து விமர்சனம் செய்தும் அவர் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகத்தை கபளீகரம் செய்ய வேண்டும் என்றும் முனைந்து திட்டமிட்டு அமித்ஷாவும், பிரதமர் மோடியும், பாஜகவின் முன்னணி தலைவர்களும், தமிழ்நாட்டில் இருப்போரும் அதற்கு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சிகள் மண்ணோடு மண்ணாக தவிடு பொடியாகும். இது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரின் பூமி. திராவிட இயக்க பூமி” எனவும் வைகோ பேசினார்.