கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!
நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள் என நடிகை வனிதா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பாடல், 1982-ல் வெளியான ‘ராசாவே உன்னை நம்பினேன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்தது. இந்த வழக்கு, பாடல் உரிமை தொடர்பான சர்ச்சைகளில் இளையராஜா தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
இவ்வழக்கு ஜூலை 14, 2025 திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இளையராஜாவின் இந்த மனு, பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துகிறது. இளையராஜாவின் குற்றச்சாட்டு, ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகும். ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலைப் பயன்படுத்துவதற்கு முன், படத் தயாரிப்புக் குழு தன்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று இளையராஜா மனுவில் குறிப்பிட்டியிருந்தார்.
இந்நிலையில், நடிகை வனிதா, இளையராஜாவின் இசையைப் பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த பதிப்புரிமை வழக்கு குறித்து அளித்த பேட்டியில், பரபரப்பு தகவல்களைப் பகிர்ந்தார். சோனி மியூசிக் நிறுவனத்திடம் தாங்கள் உரிமைகளை வாங்கியுள்ளதாகவும், தனது படம் மட்டுமல்லாமல் ‘குட் பேட் அக்லி’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ உள்ளிட்ட பிற படங்களின் மீதும் இளையராஜா வழக்கு தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
“நான் இளையராஜா வீட்டில் பூஜை செய்திருக்கிறேன். அவரது வீட்டு லாக்கர் சாவியை ஜீவா அம்மாவிடம் இருந்து வாங்கி, நகைகளை எடுத்து அம்மனுக்கு அணிவித்து, அந்த வீட்டுக்கு அவ்வளவு உழைத்திருக்கிறேன். நான் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தவள். மருமகளாகப் போக வேண்டியவள். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. எங்களுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால்தான் இளையராஜா வேண்டுமென்றே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார். வனிதா இளையராஜாவின் வீட்டு மருமகளாக இருக்க வேண்டியவரா?” என்று நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பேச்சு, இளையராஜாவின் குடும்ப பின்னணி மற்றும் வனிதாவுடனான உறவு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.