பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
“‘ப’ வடிவ வகுப்பறைகளில் ஆசிரியர்களால் அனைத்து மாணவர்களையும் எளிதாகக் கவனிக்க முடியும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் நேரடி முறையிலான இருக்கை அமைப்பு, மாணவர்களின் கவனத்தை சிதறடிப்பதாகவும், ‘ப’ வடிவ வகுப்பறைகள் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர் மற்றும் கற்றல் செயல்பாடுகளின் மீது திருப்புவதாகவும் பள்ளிக் கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “‘ப’ வடிவ வகுப்பறைகளில் ஆசிரியர்களால் அனைத்து மாணவர்களையும் எளிதாகக் கவனிக்க முடியும். மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், கூட்டு கற்றலில் ஈடுபடவும் இந்த அமைப்பு உதவும்,” என்றார்.
தொடக்க வகுப்புகளில் ஏற்கனவே இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதற்கட்டமாக, இந்த மாற்றத்தை செயல்படுத்துவதற்கு உரிய வசதிகள் மற்றும் இடவசதி உள்ள பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த முறை, மாணவர்களிடையே ஊடாட்ட கற்றலை ஊக்குவிக்கவும், ஆசிரியர்-மாணவர் உறவை மேம்படுத்தவும் உதவும் என பள்ளிக் கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டில் கல்வி முறையில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கு முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், தொடக்கப் பள்ளிகளில் இந்த முறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல பலன்களை அளித்ததாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாற்றம், மாணவர்களின் கவனத்தையும், கற்றல் ஆர்வத்தையும் மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.