சந்திராயன் 1., சந்திராயன் 2.., சந்திராயன் 3.., தொடரும் சாதனை பயணங்கள்..

Chandrayaan 1 -2-3

சந்திராயன் 1 – சந்திராயன் 2 – சந்திராயன் 3 பற்றிய சிறிய சாதனை குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம். 

இன்றைய நாள் இந்திய வரலாற்றில் மிக முக்கிய நாள் என்றே கூறே வேண்டும். யாரும் தொடாத நிலவின் தென் பகுதியை தொட்டு பார்க்க இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முதல் தடத்தை பலமாக பதிக்க காத்திருக்கும் நாள். சாந்திராயன்-3 விண்ணில் பாயும் நாள். இந்த சாதனை பயணத்தின் துவக்கமானது சந்திராயன் 1இல் ஆரம்பித்து, சந்திராயன் 2 மூலம் கற்றுக்கொண்ட சிறு தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றியை மட்டுமே தொட்டு பார்க்க திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுளது.

சந்திராயன் 1 :

சந்திராயன்-3க்கான விதை சந்திராயன் 1 தான். கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் இந்திய விஞ்ஞானிகளால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு மொத்தம் 11 ஆய்வு உபகாரணங்களோடு (5 உள்நாட்டு தயாரிப்பு, 6 வெளிநாட்டு தயாரிப்பு) அக்டோபர் மாதம் 22ஆம் தேதி PSLV C11 செயற்கைக்கோள் உதவியுடன் சந்திராயன் 1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

Chandrayaan-1
Chandrayaan-1 [Image source : ISRO]

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டதால் சந்திராயன் 1 என்ன செய்ய போகிறது அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 உறுதிபடுத்தி உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து. மொத்தம் 2 ஆண்டுகள் விண்ணில்  செயல்படும் என எதிர்பார்த்த நிலையில், 312 நாட்கள் சந்திரயான்-1 நிலவை வட்டமடித்து ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 3ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளை சந்திராயன்-1 உருவாக்கியது. 95 சதவீதம் இலக்கை எட்டியதால் சந்திராயன் 1 வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சந்திராயன்-2 :

சந்திராயன்-1இன் அடுத்தகட்ட வளர்ச்சியாக சந்திராயன்-2 என்பது நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும். ஜிஎஸ்எல்வி மார்க்-3 ஏவுகலன் மூலம் நிலவை நோக்கி சந்திராயன்-2, கடந்த ஜூலை 22, 2019 அன்று இஸ்ரோவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

Chandrayan 2
Chandrayan 2 [Images source : ISRO]

சந்திரயான்-2, நிலவின் ஆராயப்படாத தென் துருவத்தை ஆராய்வதற்காக ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றிவரும் கலனுக்கு, மேற்பரப்பில் தரையிறங்கும் கலனிலிருந்து ஊர்தி வெளியேறி தகவல்களை சேமித்து சுற்றிவரும் கலனுக்கு அனுப்ப, இது பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

இதன்படி 2019, செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்-7 ஆம் தேதி அதிகாலை நிலவில் தரையிறங்க தொடங்கி, முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்தது. அது தரையிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் போது விண்கலத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும்  தொடங்கினர்.

சந்திராயன் -3 :

அந்தவகையில் தற்போது இந்தியா உட்பட உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கும் சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான் 2வில் நிகழ்ந்த சிறு தவறுகளை சரி செய்து, அதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3 புதிய தொழில்நுட்பத்துடன் இன்னும் சில மணி துளிகளில் விண்ணில் பாய்கிறது.

Chandrayaan-3
Chandrayaan-3 [Image Source : Twitter/@isro]

இதனால் இன்றைய நாள் இந்தியாவுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நீண்ட ஆண்டு முயற்சிக்கு இன்று பலன் கிடைக்க உள்ளது. இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எல்.வி.எம்.3 – எம்4 ராக்கெட் மூலம் நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3’ விண்கலம் இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சசதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட் சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி நேரம், 30 நிமிட என்ற ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு துவங்கியது. நிலவின் தரை தளத்தை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் – 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட செலவு 615 கோடி ரூபாயாகும்.

சந்திரயான் – 3 விண்கலத்தில், நிலவில் தரையிறங்கும் ‘லேண்டர், ரோவர்’ சாதனங்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் – 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திராயன் 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும்.

எனவே, இன்று பிற்பகல் பூமியில் இருந்து புறப்படும் எல்.வி.எம்.3 – எம்4 ராக்கெட், 179 கி.மீ துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் – 3 விண்கலத்தை நிலை நிறுத்தும். அங்கிருந்து புவியின் சுற்றுவட்ட பாதையில், 36,500 கி.மீ, துாரம் வரை விண்கலம் அனுப்பப்படும். ஈர்ப்பு விசையை மையமாக வைத்து, முதலில் பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்பப்படும். இதன்பின், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் – 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chandrayaan3
Chandrayaan 3 travels in 10 phases. [Image Source : Twitter/@AnupamPKher]

இது அனைத்தும் வெற்றியடையும் பட்சத்தில், ஆக. 23 அல்லது 24ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்காகத்தான் இந்தியா மட்டுமின்றி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. ஏனென்றால், சந்திரயான் – 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் சாதனம் நிலவில் தரை இறங்கும் போது தான் தோல்வியை சந்தித்தது. இதனால் இம்முறை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த முறை வெற்றி அடையும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், சந்திரயான் – 3 குறித்து மேலும் சில விஷயங்களை பார்க்கலாம். அதாவது, நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணிக்கிறது. 10 கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால், சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்க முடியும். பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிமீ உயரத்திற்கு சந்திரயான் – 3 செல்வது தான் முதல் கட்டம். சந்திரயான் – 3 விண்கலத்தை புவியின் நீள்வட்டப்பாதையில் சுற்ற வைப்பது தான் 2ஆவது கட்டம்.

இதுபோன்று, சந்திரயான் – 3 வெற்றி அடைய 10 கட்டங்களாக பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது. சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைய 40 நாட்கள் எடுத்து கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2008 அக்., 22ல் நிலவுக்குச் சென்ற சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது. இதேபோல் சந்திரயான் – 3 விண்கலமும், நிலவு தொடர்பான பல புதிய தகவல்களை கண்டறிய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்