கர்நாடக சட்ட சபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் சித்தராமையா..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மாநில பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன்பிறகு, மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர் முதல்வராக இருந்தபொழுது தாக்கல் செய்துள்ளார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும்.
மேலும், நிதியமைச்சராக இது அவரது 14வது மாநில பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் வரும் நிதியாண்டுக்கான மொத்த செலவுகள் ரூ.3.27 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் செலவு ரூ.2.5 லட்சம் கோடி ஆகவும், மூலதனச் செலவு ரூ.54,374 கோடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் ரூ.22,441 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.