நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்..! மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

PMModi aiep

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விரிவான விவாதத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்காத காரணத்தால், நாடாளுமன்ற மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அவர் பேசுகையில், மணிபூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை. மணிப்பூர் சம்பவத்தில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது. பாரத மாதாவை அவர்கள் கொன்று விட்டார்கள் என பல்வேறு காட்டமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இரானி, தேச வரலாற்றில் முதன்முறையாக, ‘பாரத் மாதா’ கொலையைப் பற்றி ஒருவர் பேசினார். அதற்கு காங்கிரஸ் தொடர்ந்து கைதட்டுகிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என்று கூறினார்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ் என்று கூறினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதனால் நேற்று நாடாளுமன்ற மக்களவை பெரும் பரபரப்பாக இருந்தது. இரண்டு நாள் விவாதம் முடிந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்று பிரதமர் மோடி பதிலுரை அளித்த பின்பு குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.

பாஜகவுக்கு ஆதரவு எம்பிக்கள் அதிகமாக இருப்பதால், எப்படியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படாது. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. அதன் காரணமாகவே நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்