டெல்லி வன்முறை.. 500 கணக்குகளை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக விவசாயிகள போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், ஒருதரப்பு விவசாயிகள் அனுமதி கொடுத்த நேரத்திற்கு முன்னதாகவே டிராக்டர் பேரணியை தொடங்கியதால், போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஆனாலும், போலீசாரின் தடுப்புகளை மீறி விவசாயிகள் டிராக்டர்களுடன் செங்கோட்டைக்குள் நுழைந்தனர். இந்த சம்பவத்தின் போது ஒரு விவசாயி உயிரிழந்தார். ஆனால் போலீசார் சுட்டதால் தான் விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டினார். இதற்கு டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். தடுப்புகளை மீறி சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பியதாக 500 கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. தவறான தகவல் பரப்பி மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என டிவிட்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.