குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!
குரோஷியாவின் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியின் ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார். 19 வயதான இந்த இந்திய கிராண்ட்மாஸ்டர், 18 புள்ளிகளில் 14 புள்ளிகளைப் பெற்று, முதல் இடத்தைப் பிடித்தார்.
தொடர்ந்து ஆறு வெற்றிகளைப் பெற்று, ஒரு தோல்வி மற்றும் இரண்டு டிராக்களுடன், உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்ஸனை ஆறாவது சுற்றில் வீழ்த்தியதன் மூலம் போட்டியில் தனது ,முழு ஆதிக்கத்தை செலுத்தினார்.
இந்தப் போட்டியில், முதல் சுற்றில் போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டூடாவிடம் தோல்வியடைந்தாலும், பின்னர் அலிரேசா ஃபிரோஜா, பிரக்ஞானந்தா, நோடிர்பெக் அப்துசத்தோரோவ், ஃபபியானோ கருவானா மற்றும் வெஸ்லி சோ ஆகியோரை வென்று மீண்டெழுந்தார். இறுதிச் சுற்றில் வெஸ்லி சோவை 36 நகர்தல்களில் வீழ்த்தி, ரேபிட் பிரிவில் தனது வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்த வெற்றி, குகேஷின் ரேபிட் செஸ் திறனை உலக அரங்கில் நிரூபித்தது, போட்டிக்கு முன் குகேஷை “ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவங்களில் பலவீனமான வீரர்” என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், இது பெரும் பதிலடியாக அமைந்தது. இந்தப் போட்டியின் பிளிட்ஸ் பிரிவு இன்றும் (ஜூலை 5) மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது, மேலும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளின் ஒட்டுமொத்த புள்ளிகள் இறுதி வெற்றியாளரை தீர்மானிக்கப்படும்.