ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி.. குஜராத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! அடுத்தகட்ட முடிவு என்ன?

Rahul Gandhi - us

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த ராகுல்காந்தி பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ.வான பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ஆம் தேதி அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. குஜராத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதன்பின்னர், தனக்கு விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.

ஒரு மனுவில், சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், மற்றொரு மனுவில் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து, தன் மீதான தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையும் நடந்து வந்தது.

அப்போது, இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி ஹேமந்த் பிரசாக் கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். அந்தவகையில், ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், மோடி என்ற பெயர் கொண்டவர்கள் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

10க்கும் அதிகமான அவதூறு வழக்கு ராகுலுக்கு எதிராக நிலுவையில் இருப்பதை சுட்டி க்காட்டி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனையைத் நிறுத்தி வைக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை, தண்டனை வழங்கப்பட்டது நியாயமானது, சரியானது மற்றும் சட்டபூர்வமானது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு கூட வீர் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியுள்ளார். இது தொடர்பாக வீர் சாவர்க்கரின் பேரன் அவதூறு வழக்கு தாக்கல் செய்து இருக்கிறார் என ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த நீதிபதி கருத்து தெரிவித்தார்.

குஜராத் உயர்நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்ததால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது. இதனால், குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்