”குடியரசு துணை தலைவர் தேர்தல் பணிகள் தொடக்கம்”- இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை.!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக அறிவித்துள்ளது. முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சுகாதார காரணங்களை மேற்கோள் காட்டி கடந்த ஜூலை 21 அன்று தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1952-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தின் கீழ், துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பாக உள்ளது. தேர்தல் கல்லூரியை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலுக்கான ரிட்டர்னிங் அதிகாரிகள் மற்றும் உதவி ரிட்டர்னிங் அதிகாரிகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜகதீப் தன்கர் தனது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார், இது நேற்றைய தினம் முழுமையாக ஏற்கப்பட்டது. தற்போது, ராஜ்யசபையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், துணைத் தலைவர் பதவியின் பாராளுமன்ற கடமைகளை நிர்வகித்து வருகிறார், ஆனால், இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. அநேகமாக, ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் புதிய துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.