ஃப்ளையிங் கிஸ் விவகாரம் – ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக பெண் எம்.பிக்கள் புகார்!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முதல் காரச்சார விவாதம் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இன்றும் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையான விமர்சித்தார். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களை கொன்றுவிட்டீர்கள். இந்தியாவை கொன்றுவிட்டீர்கள். நீங்கள் துரோகிகள், நீங்கள் தேசபக்தர்கள் இல்லை என ஆவேசமாக பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக அரசு இந்தியா என்ற கருத்தோட்டத்தையும், பாரம்பரியத்தையும் அழித்துவிட்டது. ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். இன்று அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார் பிரதமர் மோடி. அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை என மத்திய அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசி முடித்துவிட்டு ராகுல் காந்தி அவையை விட்டு கிளம்பும்போது, அவை உறுப்பினர்களுக்கு ‘Flying kiss’ கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, எனக்கு முன் பேச வாய்ப்பளித்தவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் உறுப்பினர்கள் அமரும் நாடாளுமன்றத்தில் ஃப்ளையிங் கிஸ் கொடுக்க ஒரு பெண் வெறுப்பு கொண்ட ஆணால் மட்டுமே முடியும். இதுபோன்ற செயலை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. பெண்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரது நடத்தை காட்டுகிறது என விமர்சித்தார்.
இந்த நிலையில், மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானியை நோக்கி வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாக பாஜாகவை சேர்ந்த பெண் எம்.பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.
பாஜக எம்பி ஸ்மிருதி இரானியிடம் ஃப்ளையிங் கிஸ் கொடுப்பது போல தகாத சைகை செய்ததாகவும், அவையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் கூறி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெண் எம்பிக்கள் எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, மக்களவையில் பேசிய ராகுல் காந்தி அதிரஞ்சன் சவுதிரியை உட்கார சொல்கிறார். பின் சபாநாயகரை பார்த்து மட்டுமே சைகை செய்வது போல் இணையத்தில் வெளியான வீடியோ காட்சியில் தெரிய வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025