”குரூப் 4 தேர்வுரூப் 4 க்கான வினாத்தாள் கசியவில்லை” – டிஎன்பிஎஸ்சி விளக்கம்.!
டி.என்.பி.எஸ்.சி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடக்க உள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து தலைவர் பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரம் தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், அவர் இந்தப் பிரச்சினை குறித்து தெளிவான முறையில் பதிலளித்துள்ளார். 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 போட்டித்தேர்வு, நாளை (ஜூலை 12) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
இதனிடையே, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பஸ் கதவுக்கு A4 சீட்டில் சீல் வைக்கப்பட்டிருந்ததாகவும், கண்டெய்னர் வாகனங்களில் எடுத்துச் செல்லாமல், தனியார் பஸ்களில் எடுத்துச் செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை, தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துசென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.