ரூ.3,500 கோடி ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் சேர்ப்பு.!
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.3,500 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி மிதுன் ரெட்டியை விஜயவாடாவில் பல மணி நேர விசாரணைக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியின்போது நடந்ததாகக் கூறப்படும் 3,200 கோடி ரூபாய் மதுபான ஊழல் விவகாரத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மது ஊழல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச காவல்துறை உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான நாராயண சுவாமிக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிறப்பு விசாரணை குழு இதுவரை 40 பேரை குற்றவாளிகளாக சேர்த்து, 11 பேரை கைது செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேச காவல்துறை தாக்கல் செய்த 305 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில், 2019-2024 ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது ஜகன் மோகன் ரெட்டி மாதந்தோறும் ரூ.50-60 கோடி அளவிலான லஞ்சம் பெற்றதாகவும், இது கேசிரெட்டி ராஜசேகர் ரெட்டி, விஜய் சாய் ரெட்டி, மிதுன் ரெட்டி மற்றும் பாலாஜி கோவிந்தப்பா ஆகியோரின் வலையமைப்பு மூலம் புனல் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
அந்த ஊழல் பணம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறு பக்கம், சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 305 பக்க குற்றப்பத்திரிகையில் ஜெகன் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.