அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன் – பவன் கல்யாண் பேச்சு!
மக்கள் ஆதரவு கிடைத்தால் 2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், “அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன்” என்று பேசியிருக்கிறார். சென்னையில் 2025 மே 26 அன்று பாஜக சார்பில் நடைபெற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் “தமிழகம் சித்தர்களின் புனித பூமியாகவும், முருகனின் தெய்வீக பூமியாகவும் விளங்குகிறது.
இது வீரமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு பெயர் பெற்ற மண்ணாகும். “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து பரவும் தவறான தகவல்களை எதிர்க்க வேண்டும். சிலர் இரட்டை வேடம் அணிந்து செயல்படுகின்றனர். தமிழகம் திருவள்ளுவர், பாரதியார், எம்.ஜி.ஆர். போன்ற மாமனிதர்கள் வாழ்ந்த புனித பூமி. எதிர்க்கட்சிகள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து தங்களுக்கு சாதகமாக பேசுகின்றனர்.
தோல்வியடையும் போது, இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்” என்ற பழமொழியைப் போல எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றனர். மறைந்த முதல்வர் கருணாநிதி “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறையை ஆதரித்தார். அவர் தனது “நெஞ்சுக்கு நீதி” நூலில் இதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இதை எதிர்க்கிறார். இதன் மூலம் திமுக இரட்டை வேடம் போடுவதாக தெரிகிறது. “நான் தமிழகத்தை விட்டு வெளியேறினாலும், தமிழகம் என்னை ஒருபோதும் விடவில்லை,” என்று உணர்வுபூர்வமாக கூறினார். “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறையால் தேர்தல் செலவுகளை கணிசமாகக் குறைக்க முடியும். தொடர்ந்து நடைபெறும் தேர்தல்களால் நாடு எப்போதும் பிரசாரப் பணிகளில் மூழ்கியுள்ளது.
இந்த முறையை அமல்படுத்துவதன் மூலம், அரசின் திட்டங்களை மக்களிடம் திறம்பட கொண்டு சேர்க்க முடியும். மேலும், தொடர் தேர்தல்களால் அதிகாரிகள், காவலர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இடைவிடாத பணிச்சுமையை சந்திக்கின்றனர்” எனவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.