மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவர் வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!
நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணையில், ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி : மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளை அடிப்படையாகக் கொண்டது, இதில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு காலக்கெடு நிர்ணயிப்பது அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
கடந்த 2023-இல் தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மூன்று மாத காலக்கெடு விதித்தது.
இதனை எதிர்த்து, குடியரசுத் தலைவர் தரப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 22) ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பு, ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாப்பது குறித்து முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தலாம். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், ஆளுநர்கள் மசோதாக்களை காலதாமதம் செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன, இது மாநில அரசுகளுக்கும் மத்திய அதிகாரங்களுக்கும் இடையேயான உறவில் முக்கியமான விவாதத்தை எழுப்பியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணையில், ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.