மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மருத்துவமனையில் இருந்தபடியே தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் மூன்று நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகள் உள்ளிட்ட முக்கிய அரசு விவகாரங்கள் குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவில் கூறியதாவது “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன்ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை – தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அவரது உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறா, முதல்வர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் முதல்வர் நலமுடன் இருக்கிறார். 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.