“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!
பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்ப முயற்சித்துள்ளது என்று இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியுள்ளார்.

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி, வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இன்று காலையிலும் பாக்கிஸ்தான் தாக்குதலை நடத்தி உள்ளது, அதனை இந்தியா முறியடித்துள்ளது. பாக்கிஸ்தான் இந்திய ராணுவ தளங்களை குறிவைத்தது, அந்த தாக்குதலை வெற்றிகரமாக இந்தியா முறியடித்தது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங், ”எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை முன்னோக்கி நகர்த்தி வந்த நிலையில், அவை அனைத்தையும் இந்தியா திறம்பட இடைமறித்து பதிலடி கொடுத்துள்ளது.
மேலும், இந்தியாவை நோக்கி படைகளை நகர்த்தி வருகிறது பாகிஸ்தான், இந்திய படைகள் தயார் நிலையில் இருந்து பதிலடி தருகிறது. குறிப்பாக, விமானப்படை தளத்தின் அருகே உள்ள மருத்துவமனைகளை பாகிஸ்தான் தாக்கியது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை ட்ரோன்கள், ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியது பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்குகள், ரேடார் அமைப்புகள் உள்ளிட்டவை தாக்கப்பட்டன.
பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து தாக்க முயல்கிறது பாகிஸ்தான்.
இந்தியாவின் S-400 ஏவுகணை அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்ப முயற்சித்துள்ளது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான செய்திகளை, இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது” என்று கூறினார்.