அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இயலாமையை ஒப்புக் கொள்ளும் குணம் ரத்தத்திலேயே கிடையாது – டெல்லி உயர்நீதிமன்றம்!

அரசியல்வாதிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தோல்வி மற்றும் இயலாமையை ஒப்புக் கொள்ளும் குணம் இரத்தத்திலேயே கிடையாது என டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி அரசு டெல்லியில் உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகள், அலுவலர்கள் ஆகியோருக்கு சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவோம் என வாக்குறுதி கொடுத்து இருந்தது. ஆனால் இதுவரை 852 க்கும் மேற்பட்ட நீதிமன்ற அலுவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் அளிக்கப்படவில்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாநில நீதித்துறை சேவைகள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வெளியிட்டுள்ள உத்தரவில் அரசியல் சாசனப்படி பதவி வகிக்க கூடிய உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சில அரசு வழிகாட்டுதல் உள்ளது.
ஆனால் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதுபோல கிடையாது. கொரோனா காலத்திலும் நேரடியாக தான் அவர்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டி உள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகமாகவே உள்ளது. எனவே தங்கள் மகன் அல்லது குடும்பத்தார் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்பொழுது அவர்கள் எப்படி நிம்மதியாக பணியாற்ற முடியும். ஏற்கனவே மூன்று நீதிபதிகள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் கீழ் நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகளுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாக தான் செல்லும்.
எனவே கீழமை நீதிமன்ற நீதிபதிகளை ன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு டெல்லி அரசு கொடுத்த மருத்துவ வசதிகள் திருப்தி அளிப்பதாக இல்லை எனவும், உத்தரவு அரசியல்வாதிகளுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தங்கள் தோல்வி மற்றும் இயலாமையை ஒப்புக் கொள்ளும் மனோபாவம் ரத்தத்திலேயே கிடையாது எனவும் கடுமையாக சாடியுள்ளனர். மேலும், நீதிபதிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பான குறைகளுக்கு டெல்லி அரசு தீர்வு காண வேண்டும் எனவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.