மணிப்பூரில் வன்கொடுமை வழக்கு – கைதான 4 பேருக்கு போலீஸ் காவல்!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற விவகாரத்தில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல்.
கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை, தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மணிப்பூரில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த சமயத்தில், நேற்று முன்தினம் மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நாடே கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் 77 நாட்கள் ஆன பிறகு வெளி உலகிற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.