எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!
நீலகிரியில் எடப்பாடி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு நேற்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படியான சூழலில், இன்று காலை நீலகிரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் ” அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டால் தெரியாது, ஆனால் இப்போது யார்? என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்” என கூறினார்.
அதனை தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது ” திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே நான் பேசியிருந்தேன். எவ்வளவு பெரிய செல்வாக்கு இருந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என சொல்லியிருந்தேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
அதைப்போலவே, கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. உரிய தண்டனை வழங்கப்படும். ஆனால், பொள்ளாச்சி வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு நான் தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதே மாதிரி சமீபத்தில் அவர் அமித்ஷாவையும் சந்தித்துவிட்டு வந்தார்.
எதற்காக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால், தான் சொல்லித்தான் மெட்ரோ, 100 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார். இந்த மாதிரி Humbug-ஆ பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.