டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!
சுந்திரபாண்டியன் மற்றும் குட்டிப்புலி வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி மிஞ்சிவிட்டதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின் சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள். அப்படி தான் நடிகர் சசிகுமார் கடைசியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாக 40 கோடிகளை தாண்டியுள்ளது. எனவே, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் சம்பளத்தை உயர்த்துவாரா? என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட படத்தின் நடிகர் சசிகுமார் இந்த படத்தின் வெற்றியால் சம்பளத்தை நிச்சயமாக உயர்த்தமாட்டேன் எனவும் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தும் சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர் ” முதலில் இந்த விழாவை நான் வெற்றிவிழாவாக பார்க்கவில்லை. படத்தை பார்த்து இவ்வளவு ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்களும் படத்தை சிறப்பாக கொண்டு வந்த படக்குழுவுக்கு நன்றியை தெரிவிக்கும் விளைவாக தான் பார்கிறேன்.
படம் பார்த்துவிட்டு முதலில் என்னிடம் சம்பளத்தை உயர்த்திவிடுவீர்களா? என்று கேட்டார்கள். அவர்களுக்காக ஒன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன். நான் சம்பளத்தை ஏற்றமாட்டேன். என்னுடைய சம்பளம் ஒரே சம்பளம் தான் இதனை நான் கண்டிஷனாகவே சொல்வேன். ஏனென்றால், சம்பளத்தை ஏற்றினால் படத்தை எடுக்கும்போது பட்ஜெட்டில் இடிக்கும் எனவே, நான் இந்த படத்தின் வெற்றியால் சம்பளத்தை உயர்த்தவில்லை.
எனக்கு பல வருடங்களுக்கு பிறகு இப்படியான ஒரு வெற்றி என்பது கிடைத்திருக்கிறது. இந்த படம் வெளியான போது முதல் நாளில் உலகம் முழுவதும் 2.3 கோடி வசூல் செய்திருந்தது. இப்படியான உண்மையான வசூலை சொன்னால் மட்டும் தான் யாரும் சம்பளத்தை ஏற்றமாட்டார்கள். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் என்னுடைய மொத்த படம் 2.5 கோடி வரை தான் வசூல் செய்திருக்கிறது.
ஆனால், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியான முதல் நாளிலே இதனை வசூல் செய்துவிட்டது. என்னுடைய படங்களில் அதிகமான வசூல் செய்த படங்கள் என்றால் சுந்திரபாண்டியன் மற்றும் குட்டிப்புலி தான். இந்த படங்களின் வசூலையும் டூரிஸ்ட் ஃபேமிலி தாண்டியுள்ளது” எனவும் சசிகுமார் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.