பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!
புதிய பான் கார்டு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய விதி அமலுக்கு வந்தது.

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி, வரி ஏய்ப்பு மற்றும் போலி பான் கார்டு பயன்பாட்டைத் தடுக்கவும், நிதி பரிவர்த்தனைகளை வெளிப்படையாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கெடுவிற்குள் ஆதார்-பான் இணைப்பை முடிக்காவிட்டால், பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட நிதி சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) எச்சரித்துள்ளது.
இந்த புதிய விதி, வரி செலுத்துவோர் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். புதிய பான் கார்டு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆதார் சரிபார்ப்பு மூலமே விண்ணப்பிக்க முடியும். இது, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நிதி இணக்கத்தை வலுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பான்-ஆதார் இணைப்பு ஆன்லைனில் www.incometaxindiaefiling.gov.in இணையதளம் வழியாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ (567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12 இலக்க ஆதார்> <10 இலக்க பான்> என்று அனுப்பி) செய்யலாம். இணைப்பு நிலையை அறிய, வருமான வரித்துறையின் இணையதளத்தில் ‘Aadhaar Status’ பிரிவைப் பயன்படுத்தலாம்.
இந்த விதி, முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும், நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார்-பான் இணைப்பை உடனடியாக முடித்து, பரிவர்த்தனைகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025