சீதாராம் யெச்சூரி உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலை ஆராய்ச்சி நோக்கத்துக்காக அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது (72).
இரங்கல்
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அஇஅதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, அமமுக தலைவர் டி. டி. வி. தினகரன், உள்ளிட்ட பலரும் இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
உடல் தானம்
இந்நிலையில், சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் அவருடைய உடலை கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கூறியிருப்பதாவது “சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிமோனியா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று(செப். 12) பிற்பகல் 3.05 மணிக்கு மறைந்தார். அவரது குடும்பத்தினர் அவரது உடலை மருத்துவக் கல்விக்காகவும், ஆய்வுக்காகவும் தானமாக அளித்துள்ளனர்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.