Parliament Session : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்… பிரதமருக்கு சோனியா காந்தி பரபரப்பு கடிதம்.!

வரும் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தின் நோக்கம் பற்றி இன்னும் வெளிப்படையான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த சிறப்பு கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லை.
இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. மேலும், நேற்று காங்கிரஸ் தலைமையில், இந்தியா எதிர்கட்சி கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தினை பற்றிய சாராம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், செப்டம்பர் 18, 2023 முதல் நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள்.
மற்ற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றி யாருக்கும் தெரியாது. எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதெல்லாம், ஐந்து நாட்களும் அரசாங்க அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே.
நாங்கள் சிறப்பு அமர்வில் பங்கேற்க விரும்புகிறோம். ஏனெனில் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எங்களுக்கு வாய்ப்பளிக்கும். பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதம் மற்றும் அந்த விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு மற்றும் சிறு குறு தொழில்களின் துயரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தற்போதைய பொருளாதார நிலைமை.
- விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்பான கோரிக்கைகள்.
- அதானி வணிகக் குழுவின் பரிவர்த்தனைகளை அனைத்து வெளிப்பாடுகளின் வெளிச்சத்திலும் விசாரிக்க கோரிக்கை.
- மணிப்பூர் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் வேதனை மற்றும் மாநிலத்தில் அரசியலமைப்பு செயல்பாடு மற்றும் சமூக நல்லிணக்க பாதிப்பு.
- ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு.
- சீனாவின் இந்தியப் பகுதியின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நமது எல்லைகளில் நமது இறையாண்மைக்கு சவால்.
- ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசரத் தேவை.
- மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.
- சில மாநிலங்களில் கடுமையான வெள்ளத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்களின் தாக்கம், வறட்சி.
போன்ற ஆக்கபூர்வமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
Here is the letter from CPP Chairperson Smt. Sonia Gandhi ji to PM Modi, addressing the issues that the party wishes to discuss in the upcoming special parliamentary session. pic.twitter.com/gFZnO9eISb
— Congress (@INCIndia) September 6, 2023