நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் ஆகியவற்றை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தும் வகையில் நிதி ஆயோக் பணியாற்றும். துறைகளுக்கு இடையேயான பிரச்சனை, மாநிலங்களுக்கு தேவைப்படும் நிதி, சந்திக்கும் சவால்கள் பற்றி விவாதிக்க நிதி ஆயோக் வழிவகுக்கிறது.
மாநிலங்களை வலுப்படுத்தி நாட்டை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இருப்பினும், இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். மேலும், உடல்நிலையை காரணம் காட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நிதி ஒதுக்காதது ஏன்?
புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. RTE-யில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்காதது குறித்த வழக்கில் மத்திய அரசு இதனை தெரிவித்தது. கையெழுத்து இடாவிட்டால் நிதி தரமாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மை என தமிழக அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது.