இன்னும் சில மணிநேரங்களில் வாக்கு எண்ணிக்கை.? கர்நாடக தலைவர்களின் வியூகம் என்ன.?

இன்று காலை 8 மணிக்கு கர்நாடக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.
கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. மொத்தம் 36 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை பணிகள் துவங்க உள்ளன. பிற்பகலுக்குள் யார் ஆட்சி அமைக்க உள்ளார்கள் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை நேற்று பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவை சந்தித்து விட்டு வந்துள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டார்.
அதே போல, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், கருத்துக்கணிப்புகள் உண்மையில்லை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இந்த கருத்துகணிப்புகள் இருக்கும். காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டார். மேலும், தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.
அடுத்து இந்த தேர்தலில் முக்கிய வகிக்கும் நபராக கருதப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி கூறுகையில், தனது கட்சி 50 இடங்களை கைப்பற்றும். எங்கள் கோரிக்கைகளுக்கு யார் உடன் படுகிறார்களோ அவர்களோடு எங்கள் கூட்டணி. என வெளிப்படையாக கூறியுள்ளார்.