டெல்லி முதல்வர் யார்? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
டெல்லி முதலமைச்சரை பாஜக தலைமை இன்று தேர்வு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையில், பாஜக தலைமையகம் முதலமைச்சர் பதவிக்கான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் தான்.
இப்போது, பிரதமர் மோடி சுற்று பயணங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில், பாஜக மேலிடம் விரைவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையைத் தேர்வு செய்யும் கூட்டம் நடத்தும் எனவும், முதல்வராக தேர்வுசெய்யப்படுவரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20 அல்லது 21 அன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெறலாம் என முன்னதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பாஜக தலைமை இன்று முதல்வர் யார் என்பதை முடிவு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாருக்கு முதல்வர் பதவி?
இந்த முறை முதலமைச்சர் பதவி பர்வேஷ் வர்மாவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனாவார். 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மேற்கு டெல்லி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில், புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடிக்கவும் செய்திருந்தார். எனவே, அவருக்கு பதவி கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இவர் மட்டுமின்றி மேலும் நான்கு பேர் முதலமைச்சர் பதவிக்கான பட்டியலில் உள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி…
விஜயேந்தர் குப்தா: பாஜகவின் மூத்த தலைவரானா இவர் ரோஹினி தொகுதியில் வெற்றி பெற்றவர். அது மட்டுமின்றி முன்னாள் டெல்லி பாஜக தலைவர் மற்றும் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியவர்.
ரேகா குப்தா: முன்னாள் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரான இவர் சாலிமர் பாக் தொகுதியில் வெற்றி பெற்றவர்.
ஷிகா ராய்: கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் பாஜகவின் பெண் பிரிவு தலைவராக செயல்பட்டவர்.
மன்ஜிந்தர் சிங் சிர்சா: ரஜோரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் முன்னாள் அகாலி தளம் தலைவர்; சீக்கிய சமுதாயத்தில் செல்வாக்கு பெற்றவர்.
இவர்களில் யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என குழு கூட்டம் நடத்தி பாஜக தலைமை இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025