தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக (எம்.பி.) தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் பி.வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்க உள்ளனர்.

டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனும் பதவியேற்கின்றனர்.
இவர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் வில்சன், ராஜாத்தி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மற்றும் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்கின்றனர். ஆனால், அதிமுகவின் இன்பதுரை, தனபால் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ராஜ்யசபா எம்.பி ஆக கமல்ஹாசன் பதவி ஏற்க உள்ள நிலையில், நேற்றைய தினம் டெல்லி சென்றார். அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, வில்சன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படம் எடுத்து கொண்டனர்.