மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்.!
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கடந்த 4 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.2,117 கோடியில் 16.34 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் ரூ.9,537 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு, அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய நடவடிக்கையாக அமையும்.
- நீடூர் ஊராட்சியில் ரூ.85 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
- சுற்றுலா பயணிகளின் வருகைக்காக தரங்கம்பாடி மங்கநல்லூர் – ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இரண்டு வழி சாலையாக மேம்படுத்தப்படும்.
- சாமி நாகப்பன் நினைவாக மயிலாடுதுறையில் அவரது திருவுருவச்சிலை நிறுவப்படும்.
- குத்தாலம் வாய்க்கால் ரூ. 7 கோடியில் புனரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்.
- தாழம்பேட்டை மற்றும் வெள்ளக்கோயில் கிராமங்களில் ரூ.8 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- சீர்காழி நகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம்.
- பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.4 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- சீர்காழி நகராட்சியில் உள்ள தேர் வீதிகளில் ரூ.8 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.