உ.பி சிறுமிக்கு நீதிகேட்டு இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி… ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்….

Default Image

உ.பி,.யில், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு இன்று மாலை கவர்னர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி சார்பில் பேரணி நடக்கிறது. பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  உ.பி.,யில் ஹத்ரஸில் ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் போகும் அளவுக்குச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த மனித மிருகங்கள் யார் என்பதையும் அப்பெண் மரணவாக்குமூலமாகக் கொடுத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சூழலில் அப்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்க வேண்டிய உத்திர பிரதேச மாநில  பாஜக அரசு, எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளது. அப்பெண்ணின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

அவரது பெற்றோர்களுக்கே தெரியாமல் அவசர அவசரமாக அந்த பெண்ணின்  உடல் எரியூட்டப்பட்டுள்ளது. மேலும், ராகுல்காந்தியின் நெஞ்சைப் பிடித்து ஒரு காவல்துறை அதிகாரி தள்ளுகிறார். அவர் விழும் காட்சி, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே இழுக்கு ஆகும். ராகுலும், பிரியங்காவும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தலைகுனிவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பொதுவாகவே சிறுபான்மையினர், பெண்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பாதுகாப்பு என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேள்விக்குறியாகி வருகிறது. ஊடகங்களும் பாதுகாப்பின்மையை உணர்கின்றன. இதனைச் சரிசெய்து, அனைவர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், இதனை வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கிய பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது திமுக மகளிரணி. உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, அக்டோபர் 5ம் தேதி(இன்று) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ்காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் கையில் ஒளியேந்தி பேரணியாக அணிவகுக்க இருக்கிறது திமுக மகளிரணி; இதில் மகளிரணியினர் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.உத்தரப்பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்.

ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இதனைச் செய்ய மத்திய அரசு, உ.பி. அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக ஆளுநர் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகவே இந்தப் பேரணி. நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும். இந்தியா முழுவதும் போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்றட்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கிய, இந்த கண்டனப் பேரணியில் திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணியினர் திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன். கையில் அனைவரும் மெழுகுவர்த்தி ஒளியேந்தி அமைதியான முறையில் நமது கண்டனத்தை  அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும். இந்தியா முழுவதும் போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்றட்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்