பெற்ற தாயே இப்படி பண்ணலாமா?…கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்!

தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் திருப்பம்.
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள் மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் நேற்று முன்தினம் அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து,உடனடியாக மருத்துவர்கள் தஞ்சை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் அக்குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.மேலும்,இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில்,உயிரிழந்த அக்குழந்தையின் தாய் பிரியதர்சினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குழந்தையைப் பெற்று ஃபிளஷ் டேங்க்கில் போட்டு,கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,முறையற்ற தகாத உறவில் அவர் கருத்தரித்ததாகவும்,இது வெளியில் தெரிந்தால் தனக்கு பிரச்சனை ஏற்பட்டு விடும் என்ற காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி இல்லாமல் சுற்றி திரிந்து,பின்னர் கழிவறைக்குள் சென்று குழந்தையைப் பெற்று,ஃபிளஷ் டேங்க்கில் போட்டு கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.