மெரினாவில் பேனா சிலை.! விரைவில் டெண்டர் கோரப்படும்.. அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்.!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. இந்த பேனா சிலை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னையில் செய்தியாளிடம் இன்று பேசினார்.
அவர் கூறுகையில், கலைஞரின் பேனா நினைவு சின்னமானது இரண்டு கட்டமாக தொடங்கப்பட உள்ளது. அதில் முதற்கட்டம் கலைஞருக்கு நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பது. மற்றொன்று மெரினா கடலுக்குள் பேனா சிலை அமைப்பது. இதில் மாநில அரசு சார்பில் பேனா சிலை அமைக்க கோரிக்கை மட்டுமே அளிக்க முடியும். அந்த கோரிக்கையை அனுமதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.
பேனா சிலை தொடர்பாக இரண்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. அதில் முதல் வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. நேற்று நடைபெற்ற வழக்கும் மத்திய அரசு அனுமதியோடுதான் பேனா சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது என்று சொல்லி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
தற்போது பொதுப்பணித்துறை சார்பில் தமிழக முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். பேனா சிலை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பணிகள் எந்த நேரத்திலும் தொடரப்படும். அதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.