ஒருநாள் உலகக் கோப்பை: 15-க்கு பதிலாக 14.. இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புதல்!

2023-ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பையில் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 14-ஆம் தேதி இந்தியாவுடன் விளையாட பிசிசிஐ மற்றும் ஐசிசி உடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளில் அகமதாபாத்தில் பாதுகாப்பை நிலை நிறுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக போட்டி மாற்றியமைக்கப்படுகிறது.
அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது இரண்டு போட்டிகளின் முன்மொழியப்பட்ட தேதிகளை மாற்றியமைத்துள்ளதால், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி முதலில் திட்டமிடப்பட்ட அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று, பாகிஸ்தான் இலங்கையுடன் மோதும் போட்டி அக்டோபர் 12-ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 10-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகியவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தொடர்புகொண்டு, அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் உட்பட அதன் இரண்டு குழு போட்டிகளை மாற்றியமைத்தது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்.15-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் தொடங்கும் இந்து பண்டிகையான நவராத்திரி காரணமாக போட்டி நாளில் குஜராத் காவல்துறையால் பாதுகாப்பை வழங்க முடியாததால் போட்டி ஒரு நாளுக்கு முந்தையதாக மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியான.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கையுடன் மோதும் போட்டிக்கான தேதி மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விரைவில் ஒருநாள் உலகக்கோப்பைக்கான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை வெளியிடும் என்றும் மேலும், மற்ற அணிகள் பங்கேற்கும் சில போட்டிகள் மாற்றியமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.