சென்னை :மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது, பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”உங்களது வேளாண் நிலங்களை பறிக்க ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். சிறந்த ஆட்சி தருவதாக ஸ்டாலின் கூறுகிறார், ஆம் அவரது குடும்பத்திற்கு சிறந்த ஆட்சியை தருகிறார்.
மு.க.ஸ்டாலினால் ஒரு மருத்துவக்கல்லூரியை கூட கொண்டு வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தோம். மயிலாடுதுறை மாவட்டம் அண்ணா திமுக அரசால் உருவாக்கப்பட்டது. நேத்து ஸ்டாலின் இங்கயே வந்து எடப்பாடி பழனிசாமி என்ன செஞ்சாருன்னு கேட்டுட்டு போறார்.
மக்களின் கோரிக்கைகளை ஏற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கி கொடுத்தது எனது தலைமையிலான அஇஅதிமுக அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த மாவட்டதையே கொடுத்தோம், இதை விட என்ன வேணும்.
மீனவர்கள் பற்றி சிந்திக்காத கட்சி திமுக. கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக திமுக பொய் சொல்லி வருகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த 16 ஆண்டுகள் உங்களுக்கு கட்சத்தீவும், மீனவர்களும் கண்ணுக்கு தெரியவில்லையா ஸ்டாலின்?
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டிருக்கலாம். மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கூட்டணியில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தீங்க.. அப்போது எல்லாம் மீனவர்கள் கண்ணுக்கு தெரியல, இப்போது பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் ஸ்டாலின்” என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.
பின்னர், சீர்காழியில் பேசிய பொது எடப்பாடி பழனிசாமி, ”திமுக கூட்டணி கட்சிகள் தங்களது கொள்கைகளை அடமானம் வைத்து விட்டன. திமுக செய்யும் தவறுகளை கூட்டணி கட்சிகளும் சுமக்கின்றன. கொள்கைக் கூட்டணி என்றால், காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரே கொள்கையா? என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.
