15 வயதிலேயே சாதனை... ஆனால் அணியில் இருந்து நீக்கம்! மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, அணியில் இடம் இழந்தது முதல் மீண்டும் கம்பேக் செய்யும் முயற்சி வரை தனது கிரிக்கெட் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Hero Image

டெல்லி : ஐபிஎல் 2026 தொடரில் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியில் இடம்பிடித்த 15 வயது இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் பல்வேறு தடைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

கடந்த நான்கு மாதங்களாகத் தனது கிரிக்கெட் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ள போதிலும், தனது சுயநம்பிக்கை சிறிதும் குறையாமல் அணியின் வெற்றிக்குத் தனது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்ததன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையை முறியடித்து இந்தியாவின் மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆடிய இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறியதும், சஞ்சு சாம்சனின் வருகையைத் தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் பிளேயிங் லெவனில் இருந்து கழக்கிவிடப்பட்டதும் அவருக்குச் சிறிய ஏமாற்றத்தை அளித்ததுடன், அந்தச் சமயத்தில் அவர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அணியில் இருந்து தறகாலிகமாக நீக்கப்பட்டாலும், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளின் முறையான வழிகாட்டுதல்களும் ஊக்கமும் தனக்குத் தொடர்ந்து கிடைப்பதாகவும், அந்தத் தடைகளைத் தாண்டி தற்போது மனபலத்துடன் தன்னைத் தயாரித்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஜிம்பாப்வே தொடர் வைபவின் இளம் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைதானத்திற்கு அவரை மீண்டும் அழைத்துச் சென்றுள்ளது; சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு, இதே மைதானத்தில்தான் நடைபெற்ற U-19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல அவர் முக்கியக் காரணமாக இருந்தார்.

அந்த U-19 உலகக்கோப்பை தொடரின்போது தான் பெற்ற கள அனுபவங்களும், ஆடுகளம் மற்றும் சூழ்நிலைகள் குறித்த புரிதல்களும் ஜிம்பாப்வே தொடரில் தனக்கு மிகவும் கைக்கொடுக்கும் என்றும், தனது வழக்கமான பயிற்சியையும் ஆட்டத்தையும் முழுமையாக நம்பி இந்தப் போட்டிகளை எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

15 வயதிலேயே சாதனை... ஆனால் அணியில் இருந்து நீக்கம்! மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி