ADMK – BJP : அதிமுக தற்போது “அமித்ஷா திமுக”வாக மாறிவிட்டது.! அமைச்சர் உதயநிதி கடும் விமர்சனம்.!

ADMK Secretary Edappadi Palanisamy - Union Minister Amit shah - TN Minister Udhayanidhi stalin

மதுரையில் திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், அதிமுக கட்சி பற்றியும் , அதிமுக பாஜக கூட்டணி பற்றியும், சனாதனம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.

அமைச்சர் உதயநிதி பேசுகையில், பேரறிஞர் அண்ணா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது குறித்து செல்லூர் ராஜு பேசியிருந்தார். அதில், ” திமுக இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.” என கூறியிருந்தார். ஆனால் அது தவறு. முதல் நாளே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துவிட்டார். மேலும், சில பேருக்கு தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும். சிலபேரை அப்படியே உதாசீனப்படுத்தி செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிக்கத்தான் திமுக தோற்றுவிக்கப்பட்டது. சனாதனம் இருக்கும் வரை போராடி தான் ஆக வேண்டும். சனாதனம் எனும் சேற்றில் இருந்து இன்னும் நாம் வெளியே வராதது வருத்தம் அளிக்கிறது. இன்னும் சிலர் அந்த சேற்றை சந்தனம் என பூசி கொள்கிறார்கள். இதனை நினைத்து வெட்கமும் வேதனையும் படுகிறேன்.” என்று அண்ணா எழுதியதை செல்லூர் ராஜு பொதுவெளியில் சொல்ல தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சனாதனம் என்றால் என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள். சுமார் 850 கோடி செலவில் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் மத்திய அரசால் கட்டப்படுகிறது. அந்த கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து தனி விமானம் மூலம் சாமியார்கள் எல்லாம் செல்கிறார்கள். செங்கோல் எல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அந்த விழாவுக்கு மத்திய அரசு அழைக்கவில்லை.

மேலும், நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் முதல் அவை கூடுகிறது. அதற்கு ஹிந்தி நடிகை எல்லாம் வருகிறார்கள். ஆனால், அங்கும் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு இல்லை. ஏனென்றால் திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். கணவனை இழந்தவர். அதனால், அவரை கூப்பிடாமல் மறுத்து விட்டார்கள் என்று கடுமையான விமர்சனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார்.

அடுத்து, ஜெயலலிதா எப்போதும் உயிரிழந்தாரோ அப்போதே அதிமுக பாஜகவின் அடிமைகளாக மாறிவிட்டது. தற்போது இருப்பது ‘அண்ணா திமுக’ அல்ல அது ‘அமித்ஷா திமுக’ என்றும் விமர்சனம் செய்தார் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்